கனடாவில் இலங்கை தமிழர்களுக்கான சர்வஜன வாக்கெடுப்பு.

கனடாவில் இன்று நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அசாங்கத்தின், இலங்கை தமிழர்களுக்கான சர்வஜன வாக்கெடுப்பு போராட்டத்தில் ஐக்கிய நாடுகளின் முன்னாள் உதவி செயலாளர் ஒருவர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் முன்னாள் உதவி செயலாளர் அட்ரினெஸ் மெல்காட்டே என்பவரே இந்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யெஸ் ரெபரன்ட்டம்‘ என்ற பெயரில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்தை தொடர்ந்து தமது கோரிக்கையை வலியுறுத்தி சர்வதேச ரீதியில் இலங்கை தமிழர்களுக்கான சர்வஜன வாக்கெடுப்பை கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை வலியுறுத்தும் வகையிலேயே இந்த போராட்டம் அமைவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1958,1977, 1983 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பாரிய கொலை சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் இவ்வாறான வன்முறைகளின் பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கள் மூலம் பல நாடுகளின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சேபியன் – மோன்டேனேகிரின் உடன்பாடு, பப்புவா நியூகினி – போகெய்ன்வில்லி சமதான உடன்பாடு, கிழக்கு திமோர், ஸ்கோட்லாந்து, கொசோவோ, தென்சூடான், கியுபெக் போன்ற இடங்களிலும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.