பந்துவீச்சாளர்களின் அதிரடியில் சன்றைசர்ஸ் அபார வெற்றி!

நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளின் 10 ஆவது போட்டியில் சன்றைசர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது

கொல்கத்தா, ஈடன் கார்டின் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் சன்றைசர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சன்றைசர்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.

கொல்கத்தா அணிக்காக கிரிஸ் லைன் 49 ஓட்டங்களையும், கார்த்திக் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ஏனைய வீரர்கள் மிகவும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் புவனேஸ்குமார் 3 விக்கெட்டுகளையும், ஸ்ரங்லேக் மற்றும் ஹஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதோடு ஹகுல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு 139 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் களமிறங்கிய சன்றைசர்ஸ் அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து தனது வெற்றியிலக்கினை அடைந்தது.

சன்றைசர்ஸ் அணிக்காக வில்லியம்ஸன் 50 ஓட்டங்களையும், அல் ஹஷன் 27 ஓட்டங்களையும், ஷஹா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் நரைன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ஜோன்சன், ஷாவ்லா மற்றும் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைப் கைப்பற்றினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்ரங்லேக் தெரிவுசெய்யப்பட்டார்.