மாநகர சபை உறுப்பினரின் கூற்று சுய கௌரவத்தை பாதிப்பதாகும்!

மாநகர சபையின் கூட்டத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் மு.றெமிடியஸின் கூற்று, எனது சுய கௌரவத்தை பாதிக்கும் கூற்றாகும் என வட. மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் கூட்டத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் மு.றெமிடியஸ் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அவ்வறிக்கையில்,

“யாழ். மாநகரின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த வியாபார நிலையங்கள் எனது தலைமையில் கட்டப்பட்டதாகவும் ஆலயம் அமைந்துள்ள காணியின் சோலைவரியை எனது பெயரில் மாற்றியுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

யாழ். மாநகர சபை புதிய கட்டடத் தொகுதி அமைப்பதற்கு முன் 6 வியாபார நிலையங்கள் எனது தலைமையில் கட்டப்பட்டது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவ்வியாபார நிலையங்கள் மாநகர முதல்வராக இருந்த காலஞ்சென்ற அல்பிரட் துரையப்பாவினால் நிலக்குத்தகையாக வழங்கப்பட்ட காணியில் அமைக்கப்பட்டவையாகும்.

மேலும், ஆலயம் அமைந்துள்ள காணியின் சோலைவரியை எனது பெயரில் மாற்றியுள்ளேன் என்ற குற்றச்சாட்டு எதுவித ஆதாரமும் அற்றது. ஆதனவரி பெயர் மாற்றத்திற்கான நடைமுறைகளைப் பின்பற்றியே அலுவலர்கள் செயற்படுகின்றார்கள்.

இவை தொடர்பான ஆவணங்களை விசாரணை செய்து மாநகரசபையின் அடுத்த கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வேண்டுகின்றேன்” எனத் தெரிவித்தார்.